ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு


ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 March 2019 3:45 AM IST (Updated: 21 March 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மச்சுவாடி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் குணம் (வயது 56). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கந்தர்வகோட்டையில் நில அளவையராக வேலை பார்த்து வந்தார். அப்போது, கந்தர்வகோட்டையை சேர்ந்த தாண்டமுத்து தனக்கு சொந்தமான நிலத்தை அளப்பதற்கு குணத்திடம் மனு கொடுத்துள்ளார். அவரிடம் நிலத்தை அளக்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாக குணம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மனமில்லாத தாண்டமுத்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தாண்டமுத்துவிடம் கொடுத்து குணத்திடம் கொடுக்குமாறு கூறினர். அதன்பேரில் தாண்டமுத்து, குணத்திடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குணத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அகிலாஷாலினி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக நில அளவையர் குணத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார். 

Next Story