சேலையூர் அருகே பெண்ணை கொன்று கழிவுநீர் தொட்டியில் உடல் வீச்சு தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
சேலையூர் அருகே, பெண்ணை கொன்று உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள கோவிலாஞ்சேரி, அகரம் தென் பிரதான சாலையை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 54). இவர், சொந்தமாக விவசாய நிலம் மற்றும் மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் விழுப்புரத்தைச் சேர்ந்த தேவி (35) என்ற பெண், தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டதாக கூறி, குணசேகரனிடம் வேலை கேட்டார்.
குணசேகரனும் தனது விவசாய நிலம் மற்றும் மாடுகளை பராமரிக்க தேவியை அங்கேயே தங்கி வேலை செய்ய ஒப்புக்கொண்டார். கடந்த 3 மாதங்களாக தேவி அங்கு வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 3–ந்தேதி தேவியின் கணவர் என்று கூறிக்கொண்டு வாலிபர் ஒருவர் வந்து தேவியை ஊருக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அவருடன் செல்ல தேவி மறுத்து விட்டார்.
எனவே இருவரும் அங்கேயே தங்கி வேலை செய்வதாக குணசேகரனிடம் கூறினர். அதற்கு குணசேகரனும் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு கணவன்–மனைவி இருவரும் அங்கேயே தங்கி இருந்தனர்.
ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 16–ந்தேதியில் இருந்து தேவி மற்றும் அவரது கணவர் இருவரும் மாயமானார்கள். இருவரும் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என நினைத்த குணசேகரன், அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை குணசேகரனுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன், கழிவுநீர் தொட்டி மூடியை திறந்து பார்த்தார். அதில், மாயமானதாக கருதப்பட்ட தேவி, பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், கழிவுநீர் தொட்டியில் கிடந்த தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவியுடன் கணவர் என்று கூறி தங்கி இருந்த வாலிபர்தான், அவரை கொன்று உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். உண்மையிலேயே அந்த வாலிபர் தேவியின் கணவர் தானா? அல்லது காதலனா? என்பதும் தெரியவில்லை.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.