பிச்சம்பாளையம் அருகே பள்ளி முன் பெற்றோர் தர்ணா போராட்டம் புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தினர்


பிச்சம்பாளையம் அருகே பள்ளி முன் பெற்றோர் தர்ணா போராட்டம் புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தினர்
x
தினத்தந்தி 20 March 2019 10:30 PM GMT (Updated: 20 March 2019 9:45 PM GMT)

பிச்சம்பாளையம் அருகே கேத்தம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பெற்றோர் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையத்தை அடுத்த கேத்தம்பாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை 380 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதில் ஒரு அறை தலைமையாசிரியை அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த ஒரு வகுப்பறையை 2–ஆக பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மீதமுள்ள 6 வகுப்புகளை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியிலேயே பாடம் நடத்தப்படுகிறது. அந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகமும், பெற்றோர்களும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர் மற்றும் கலெக்டருக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் 60–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீரென பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பெற்றோர்கள் கூறியதாவது:–

380 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் குறைந்தது 8 வகுப்பறைகளாக இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு வகுப்பறையை வைத்து கொண்டு 8–ம் வகுப்பு வரை பள்ளி நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு கரும்பலகையில் எழுதி போட்டு பாடம் கற்று கொடுத்தால் மட்டுமே எளிதாக புரியும். பல ஆண்டுகளாக மரத்தடியிலேயே பாடம் நடத்தப்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

பள்ளியின் அருகிலேயே அரசுக்கு சொந்தமான 33 சென்ட் இடம் உள்ளது. அங்கு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டலாம். மேலும் பள்ளி தற்போது செயல்பட்டு வரும் கட்டிடம் மிகவும் சேதமடைந்து எந்த நிலையிலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கல்வியாண்டின் முதல் நாளிலேயே மாணவர்களும், பெற்றோர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story