வேடசந்தூர் அருகே, குடிநீர் கேட்டு 3 கிராம மக்கள் சாலை மறியல்


வேடசந்தூர் அருகே, குடிநீர் கேட்டு 3 கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 March 2019 10:08 PM GMT (Updated: 20 March 2019 10:08 PM GMT)

வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு 3 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள ஒத்தக்கடை, எல்லையாறு, செங்கோட்டைப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளது. ஏற்கனவே இந்த பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

ஆனால் கடும் வறட்சி காரணமாக தற்போது ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டன. இதையடுத்து காவிரி கூட்டுக்குடி நீர் திட்டத்தின் கீழ் இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதுவும் கடந்த சில நாட்களாக முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து ஒத்தக்கடையில் திண்டுக்கல்-கரூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story