40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி


40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 20 March 2019 11:30 PM GMT (Updated: 20 March 2019 10:45 PM GMT)

‘தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’ என்று சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் அறிமுக கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய பாரதத்திற்கு நிலையான ஆட்சி தேவை. ஆகவே, இந்த நிலையான ஆட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வருவார் என்று ஒட்டுமொத்த மக்களே தீர்மானித்து இருக்கின்றார்கள். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஒட்டுமொத்த மக்களையும் கருத்தில் கொண்டே மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும் என்பதை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால் செய்வோம்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்ட 2-வது கட்ட பணிக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்தவுடன் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடங்கப்படும். அதேபோல், கோவை மாநகரிலும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்திருக்கிறேன். அதன்படி கோவையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் மாவட்ட சாலைகள், நெடுஞ்சாலைகள் அத்தனையும் விரிவாக்கப்படும். இதற்கு மத்திய அரசு தேவையான நிதி வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கும் சில விஷயங்கள் பொய். சேலத்தில் எல்லா இடங்களிலும் பாலம் கட்டப்பட்டுவிட்டது. பிறகு எப்படி மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த முடியும்? ஒரு அறிக்கையை கொடுக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. அறிக்கையை கொடுத்து இருக்கின்றது.

தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் மேற்கொள்வார். இதற்காக பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். எங்களுடைய பணி வேகமாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதேபோல், ஒரு இடத்தில் பா.ம.க.வும், ஒரு இடத்தில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றது.

தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 90 சதவீத தொண்டர்கள் தம்மிடம் இருப்பதாக கூறும் அ.ம.மு.க. கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா?. அவர்கள் ஒரு கட்சியாகவே பதிவு செய்யவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குழந்தை பிறக்காமலேயே பெயர் வைத்த மாதிரி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது பற்றி வெளியாகும் கருத்து கணிப்புகள் எல்லாம், அது கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள் ஆகும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாஜலம், சக்திவேல், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, சின்னதம்பி, ராஜா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பங்க் வெங்கடாசலம், கே.சி.செல்வராஜூ, ராம்ராஜ், ஜான் கென்னடி, பகுதி செயலாளர்கள் சண்முகம், தியாகராஜன், யாதவமூர்த்தி, சூரமங்கலம் பகுதி ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜங்ஷன் பாவா, பொன்னி கூட்டுறவு சங்க இயக்குனர் செங்கோட்டையன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள், மாநில துணைத்தலைவர் மு.கார்த்தி, பா.ஜனதா கட்சி சூரமங்கலம் மண்டல தலைவர் ரமேஷ், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், கிச்சிப்பாளையம் பகுதி பொருளாளர் ஆட்டோ சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story