சமையல் கியாஸ் சிலிண்டர்களில் துண்டுப்பிரசுரங்களை இணைத்து விழிப்புணர்வு - கலெக்டர் தொடங்கி வைத்தார்


சமையல் கியாஸ் சிலிண்டர்களில் துண்டுப்பிரசுரங்களை இணைத்து விழிப்புணர்வு - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 March 2019 11:30 PM GMT (Updated: 20 March 2019 11:05 PM GMT)

100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து சமையல் கியாஸ் சிலிண்டர்களில் துண்டுப்பிரசுரங்களை இணைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தற்போது வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி, வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ள சமையல் கியாஸ் சிலிண்டர்களில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து துண்டுப்பிரசுரங்களை இணைக்கும் பணியினை வேங்கிக்கால் பகுதியில் உள்ள வானவில் நகரில் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில் “வீடுகளுக்கு கொண்டு செல்லும் 4 லட்சத்து 64 ஆயிரத்து 246 சமையல் கியாஸ் சிலிண்டர்களில் விழிப்புணர்வு அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் இணைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த கியாஸ் சிலிண்டரில் உள்ள துண்டுப்பிரசுரத்தை படித்து பார்த்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொண்டு அனைவரும் தவறாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

இதில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் மற்றும் பொதுமக்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story