தூத்துக்குடியில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பு குழுவினருடன் ஆலோசனை
தூத்துக்குடியில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆகாஷ் சிங்காய், அபிஜித் அடிகாரி, வருமான வரி கண்காணிப்பு அலுவலர் கார்த்திகா ஆகியோர் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்துக்கு தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி தொகுதியில் அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் நடத்தை விதிகளை கண்காணிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் புகார்கள் ஏதேனும் வரும்பட்சத்தில் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்து புகார்கள் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிப்பார்கள். எனவே, தேர்தல் தொடர்பான ஒவ்வொரு வேட்பாளரின் செலவுகளை கணக்கிடும்போது மிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும்போது அனைத்து காட்சிகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பணம் அல்லது பரிசு பொருட்கள் வாகன சோதனையில் கண்டறியப்பட்டால் அந்த பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் விலை மதிப்பு கூடிய பொருட்கள் இருந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அனைவரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ளதால் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆகாஷ் சிங்காய், அபிஜித் அடிகாரி ஆகியோர் கண்காணிப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். தேர்தல் பணிகள் குறித்து சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக கேட்டறிந்து தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும் அலுவலர்கள் நிலையாக ஒரே இடத்தில் சோதனையில் ஈடுபடாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் சோதனை பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதி மக்கள் தேர்தல் செலவின புகார்களை, தேர்தல் செலவின பார்வையாளர் ஆகாஷ் சிங்காய், செல்போன்: 63814 24955 என்ற எண்ணிலும், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதி மக்கள் தேர்தல் செலவின புகார்களை தேர்தல் செலவின பார்வையாளர் அபிஜித் அடிகாரியை செல்போன்: 63813 38386 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள புதிய சுற்றுலா மாளிகையில் தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் நேரில் சென்றும் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story