கடலூர் மாவட்டத்தில், வாகன சோதனையில் ரூ.22¾ லட்சம் பறிமுதல்


கடலூர் மாவட்டத்தில், வாகன சோதனையில் ரூ.22¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 March 2019 4:30 AM IST (Updated: 21 March 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.22¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தாசில்தார் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் வடலூர்-கும்பகோணம் சாலையில் உள்ள கருங்குழியில் நேற்று மதியம் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வந்த தனியார் ஏஜென்சியின் வாகனத்தை தாசில்தார் சிவா நிறுத்தி சோதனை செய்தார். அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 19 லட்சம் ரூபாய் இருந்ததால் அதனை தாசில்தார் சிவா பறிமுதல் செய்து அதை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பணம் குறிஞ்சிப்பாடி கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் ரெட்டிச்சாவடியில் பறக்கும் படை தாசில்தார் நாராயணன் தலைமையிலான குழுவினர் புதுச்சேரி-கடலூர் சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மரக்காணம் மஞ்சக்குப்பத்தைச்சேர்ந்த மீன் வியாபாரி கஜேந்திரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.58 ஆயிரம் கொண்டு வந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பண்ருட்டி அருகே உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் கும்பகோணம்- சென்னை மெயின்ரோட்டில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தாசில்தார் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் பயணம் செய்த நடுக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 3 லட்சத்து 30 ஆயிரத்து 200 ரூபாய் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்தனர்.

நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் வாகன சோதனையில் மொத்தம் 22 லட்சத்து 88 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story