வடுவூர் ஏரியில் புயலால் சேதமடைந்த பார்வையாளர் மாடம் சீரமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு


வடுவூர் ஏரியில் புயலால் சேதமடைந்த பார்வையாளர் மாடம் சீரமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 March 2019 4:15 AM IST (Updated: 22 March 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

வடுவூர் ஏரியில் புயலால் சேதமடைந்த பார்வையாளர் மாடத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம், வடுவூரில் உள்ள ஏரி 316 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது. இந்த ஏரிக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வடுவூர் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருப்பது வழக்கம். இங்கு நிலவும் இயற்கை சூழல் பறவைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது.

இதன் காரணமாக இந்த காலகட்டத்தில் ஏரியில் தங்குவதை வெளிநாட்டு பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. வடுவூரில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அரிய வகை பறவை இனங்களை ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரை காணலாம்.

இனப்பெருக்கத்துக்காக வெளிநாட்டு பறவைகள் வடுவூரில் முகாமிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் அரிய வகை பறவைகளை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் ஆங்காங்கே அமைந்த மணல் திட்டுகளில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருக்கின்றன.

இதில் பறவைகள் அமர்ந்திருக்கும் காட்சி சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்துகிறது. பறவைகள் இரை தேட புறப்படும் காலை நேரத்திலும், மாலையில் ஏரிக்கு வரும் காட்சிகளை காண வசதியாக ஏரி கரையோரங்களில் 2 இடங்களில் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தஞ்சை-மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளதால் வடுவூர் ஏரி வழியே செல்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி ஏரியையும் அதில் அமர்ந்திருக்கும் பறவைகளையும் கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஏரியின் அழகையும் பறவைகளையும் கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறை கட்டுப்பாட்டில் பார்வையாளர் மாடம் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் இந்த பார்வையாளர் மாடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சேதமடைந்தது. மேற்கூரை சீரமைக்கப்படாமல் இருப்பதால் இதில் பார்வையாளர்கள் நிற்கும் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சேதமடைந்த பார்வையாளர் மாடத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story