மீனவர்களுக்கு இலவசமாக டீசல் வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


மீனவர்களுக்கு இலவசமாக டீசல் வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 22 March 2019 4:30 AM IST (Updated: 22 March 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்களுக்கு டீசலை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகையில் அனைத்து மாவட்ட ஆழ்கடல் மற்றும் மீன்பிடி விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்தாஸ், வரதன், முத்துகுமரன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு துணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புயல் மற்றும் சுனாமியின் போது உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பு ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே, மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்திட இனிவரும் காலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களை மீன்பிடி தடைக்காலமாக அரசு அறிவிக்க வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு 50 சதவீத மானியத்துடன் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் கட்டுவதற்கு அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்பேரில் தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விண்ணப்பங்கள் அளித்தனர். ஆனால் 162 விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியானவை என அறிவிக்கப்பட்டு, அந்த திட்டத்தில் 9 விசைப்படகுகள் மட்டுமே மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள விண்ணப்பங்களுக்கு அரசு உடனடியாக விசைப்படகுகள் வழங்க வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களுக்கு டீசல் அனைத்தையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story