பொள்ளாச்சி அருகே பரபரப்பு, குடிபோதையில் பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசாமிகள் - பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்


பொள்ளாச்சி அருகே பரபரப்பு, குடிபோதையில் பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசாமிகள் - பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 22 March 2019 4:15 AM IST (Updated: 22 March 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் பெண்களை செல்போனில் படம் பிடித்த ஆசாமிகளை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் சின்னாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அரங்கில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள ஏராளமான ஆண்கள், பெண்கள் வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெண்களை 2 ஆசாமிகள் செல்போனில் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. இதை பார்த்த அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை திட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்து தாக்கினர். ஏற்கனவே பொள்ளாச்சியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை சொல்லி பொதுமக்கள் விடாமல் 2 பேர் மீதும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்தில் இருந்து நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசாரிடம் பொதுமக்கள் 2 ஆசாமி களையும் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், குடிபோதையில் பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்தது தெரியவந்தது. மேலும் யாரும் புகார் கொடுக்காததால் 2 பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பெண்களை 2 ஆசாமிகள் குடிபோதையில் செல்போனில் புகைப்படம் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story