கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்


கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 7:36 PM GMT)

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்திய கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலூர் கிராமத்தில் ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் தமிழக அரசு இதற்காக இரண்டு நீதிமன்றங்களை அமைத்து அதன் மூலம் தீர்ப்பு வழங்கியும், அந்த நிறுவனம் இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்காமலும், அனல் மின் திட்டத்தை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதால் சொந்த ஊரில் அகதிகளாக விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மூலம் கிடைக்கப்பெறும் எந்த ஒரு சலுகைகளையும் பெற முடியாத சூழ்நிலையிலும், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் கடன் வாங்க வங்கியை நாடினால் “ஷ்யூரிட்டி“ கேட்பதாகவும், திருமண வயதை கடந்து பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே அவர்களுக்கு இழப்பீட்டு தொகையை பெற்றுத்தரவும், மேலும் அனல் மின் திட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நிலத்தை மீண்டும் எங்களிடமே திரும்பத்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை கட்டி வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்கான அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் நடைபெற்றது. பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும் இதற்கு உடன்படாத மேலூர் வடக்குத்தெரு, ரோட்டுத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள சிலர் நேற்று அவரவர் வீடுகளில் கருப்பு கொடியை கட்டி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் ஆண்டிமடம் தாசில்தார் ராஜமூர்த்தி, ஆண்டிமடம் வருவாய் அதிகாரி திலகவதி, மேலூர் கிராம நிர்வாக அதிகாரி குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும், முடிவுகளும் தற்போது கூற இயலாது. எனவே தேர்தல் முடிந்த பின்பே உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். மேலும் கோரிக்கைகள் பற்றி அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று கூறினர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story