தர்மபுரி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்


தர்மபுரி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்
x
தினத்தந்தி 22 March 2019 4:30 AM IST (Updated: 22 March 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடக்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் டாக்டர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகிறார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் ஆ.மணியும், அரூர்(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் கிருஷ்ணகுமாரும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அதன்படி தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு ஒடசல்பட்டி கூட்டுரோடு பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு தர்மபுரி நகரில் அதியமான் அரண்மனை ஓட்டல் எதிரில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து நாளை அரூர் அண்ணாசிலை அருகே காலை 10 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். இந்த கூட்டங்களில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Next Story