அரசு மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிய லாரிகள் சிறைபிடிப்பு கிடங்கை பொதுமக்கள் முற்றுகை


அரசு மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிய லாரிகள் சிறைபிடிப்பு கிடங்கை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 March 2019 4:30 AM IST (Updated: 22 March 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே அரசு மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிய லாரிகள் சிறைபிடித்து கிடங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தோப்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு மணல், லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கு மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட குன்னிப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மணல் எடுத்து வரப்பட்டு மணல் கிடங்கில் இருப்பு வைத்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட மணல் லாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் லாரிகளுக்கு 2 யூனிட் மணலும், டாரஸ் லாரிகளுக்கு 3 யூனிட் மணலும் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை அரசு மணல் கிடங்கில் இருந்து வெளியில் சென்ற லாரியில் அளவிற்கு அதிகமாக மணல் இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து மோகனூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவலடி மற்றும் நிர்வாகிகள் ராஜாகண்ணன், வரதராசன், கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் நவலடி மற்றும் பொதுமக்கள் லாரியை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து மணல் கிடங்கிற்கு வந்த லாரியிலும் அளவுக்கு அதிகமாக மணல் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மணல் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் நாமக்கல் துணை போலீஸ் கண்காணிப்பாளர் காந்தி, மோகனூர் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அளவுக்கு அதிகமான மணல் ஏற்றி வந்த லாரிகளை மோகனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது மணல் கிடங்கு பகுதியில் இருந்த கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அதிரடி படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மணல் குடோனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொட்டகை தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றியது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story