ஆண்டிப்பட்டி புதிய பாசன திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு
ஆண்டிப்பட்டி புதிய பாசன திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் 50-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுகுளங்கள் உள்ளது. மழை பெய்தால் மட்டுமே கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் நிலை உள்ளது. இந்த கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் வகையில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திப்பரவு அணைத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த திட்டம் பல்வேறு காரணங்களால் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டம் நிறைவேற வாய்ப்பில்லை என்பதை அறிந்த ஆண்டிப்பட்டி தமிழ் விவசாயிகள் சங்கத்தினர், திப்பரவு அணைத்திட்டத்திற்கு மாற்றாக புதிய பாசன திட்டத்தினை ஏற்படுத்தினர்.
அதன்படி கம்பம் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரமுடியும் என்பதை தனியார் பொறியாளர்களின் உதவியுடன் ஆய்வு நடத்தினர். இந்த திட்டத்திற்கு 47 கிலோமீட்டர் தூரம் குழாய்கள் அமைக்கவேண்டும். இந்த புதிய திட்டத்தினை செயல்படுத்தினால் ஆண்டிப்பட்டியில் உள்ள அனைத்து கண்மாய்களும் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் வரைவு மதிப்பீட்டை தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் ஆகியோரிடம் வழங்கி நிறைவேற்றும்படி மனுகொடுத்து இருந்தனர். இந்த புதிய திட்டத்திற்கான அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமராஜ், மாவட்ட செய லாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முல்லைப்பெரியாற்றில் இருந்து ஆண்டிப்பட்டி பகுதிக்கு பாசன வசதி செய்யும் திட்டத்தினை செயல்படுத்த வலியுறுத்தி, வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்றும், விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த திட்டம் குறித்து அரசு அறிவிக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story