கோபி அருகே, கொடிவேரி அணையில் மூழ்கி மாணவர் சாவு - நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
கோபி அருகே கொடிவேரி அணையில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
டி.என்.பாளையம்,
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுருளிராஜன். இவருடைய மகன் திருமூர்த்தி (வயது 17). இவர் தற்போதுதான் பிளஸ்-2 தேர்வை எழுதினார். இந்த நிலையில் திருமூர்த்தி தனது நண்பர்கள் 5 பேருடன் மோட்டார்சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு நேற்று வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் அணையில் ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அணையின் ஆழமான பகுதிக்கு சென்றதால் திருமூர்த்தி தண்ணீரில் மூழ்கினார். இதனை கவனித்த அவரின் நண்பர்கள், திருமூர்த்தியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதனால் திருமூர்த்தி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீனவர்கள் உதவியுடன் அணையில் மூழ்கிய திருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அணையில் மூழ்கி இறந்த திருமூர்த்தியின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story