பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்


பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 22 March 2019 10:30 PM GMT (Updated: 22 March 2019 6:27 PM GMT)

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பூந்தமல்லி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு பூந்தமல்லி(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

அ.தி.மு.க. சார்பில் பாரிவாக்கம் வைதியநாதன் போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பூந்தமல்லி பனையாத்தம்மன் கோவிலில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக பூந்தமல்லி தாசில்தார் அலுவலகம் வந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னாவிடம் வைதியநாதன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நேரத்தில் வந்ததால் பிரசார வாகனத்துடன் உள்ளே அனுப்பும்படி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருடன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரசார வாகனத்துடன் வைதியநாதனை உள்ளே செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.

அதேபோல் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில், முன்னாள் எம்.பி.யும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். நேற்று அவர், பூந்தமல்லி பனையாத்தம்மன் கோவில் அருகே இருந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னாவிடம் கிருஷ்ணசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், நகர செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஒரே நாளில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகம் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story