காரில் கொண்டு சென்ற ரூ.68 லட்சம் வெள்ளி நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி


காரில் கொண்டு சென்ற ரூ.68 லட்சம் வெள்ளி நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
x
தினத்தந்தி 22 March 2019 10:30 PM GMT (Updated: 22 March 2019 8:48 PM GMT)

அரியலூர் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.68 லட்சம் வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அரியலூர்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி உத்தரவின்பேரில், தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூரை அடுத்த நாச்சியார்பேட்டை கிராமம் அருகே தேர்தல் பறக்கும் படையினரான நிலையான கண்காணிப்பு அலுவலர் ஈழரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த காரை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருச்சியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த காரில் சோதனையிட்டதில், அதில் உரிய ஆவணங்களின்றி வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மதிப்பு ரூ.68 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர். பின்னர் அந்த வெள்ளி நகைகளை அரியலூர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சத்தியநாராயணனிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த வெள்ளி நகைகள் அரியலூர் மாவட்ட கருவூலத்தில்ஒப்படைக்கப்பட்டது.

இந்த வெள்ளி நகைகள் ஜெயங்கொண்டத்தில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து முருகனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதே போல் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அணைக்குடம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினரான செந்துறை ஒன்றிய உதவி பொறியாளர் கண்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி அதிரடி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி கோவிந்தபுதூரை சேர்ந்த செந்தில் என்பவர் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்தை காரில் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி முன்னிலையில் ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Next Story