அரவக்குறிச்சி அருகே பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கொத்தனார்


அரவக்குறிச்சி அருகே பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கொத்தனார்
x
தினத்தந்தி 23 March 2019 3:45 AM IST (Updated: 23 March 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரால் பரபரப்பு ஏற்பட்டது.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஈசநத்தம் நாராநாயக்கனூரை சேர்ந்தவர் ராமன் (வயது 24). கொத்தனார். நேற்று காலை இவர், ஈசநத்தத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் குடிபோதையில் திடீரென ஏறினார்.

இதைப்பார்த்த அங்கிருந்த நபர்கள் ஓடி வந்து, கீழே இறங்குமாறு கூறி சத்தம் போட்டனர். எனினும் அதனை கண்டு கொள்ளாமல் ராமன், செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி சென்றுவிட்டார். பின்னர், என்னை பலரும் கிண்டல் செய்ததால், நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என அவர் மிரட்டல் விடுத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், மைக் மூலம், தற்கொலை செய்ய வேண்டாம், கீழே இறங்கி வா என்று கூறினர். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல், கோபுரத்திலிருந்து குதிக்க முற்பட்டார். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு படைவீரர்கள், ராமனை மீட்கும் பொருட்டு வலையை கட்ட ஆயத்தமாகினர். அப்போது கிண்டல் செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, கோபுரத்தில் இருந்து அவர் கீழே இறங்கி வந்தார்.

உடனே அவரை, அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story