தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியில்லை இந்திய கம்யூனிஸ்டு திடீர் முடிவு


தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியில்லை இந்திய கம்யூனிஸ்டு திடீர் முடிவு
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 9:45 PM GMT)

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவெடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு வேட்பாளராக தொழிலதிபர் வெங்கடேசனும் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலின்போது இந்த தொகுதியில் 2-வது இடத்தை பிடித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிட விரும்பியது.

ஆனால் தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் மாநில நிர்வாகக்குழு கூடி விவாதித்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனால் கூட்டணியில் பிரச்சினை ஏற்படும் என்று கருதப்பட்டதால் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின் கட்சி தலைமையின் முடிவின்படி நடப்போம் என்று இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் அறிவித்தனர்.

இந்தநிலையில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக கடந்த சில தினங்களாக விவாதித்தோம். அங்கு நாங்கள் கடந்த தேர்தலில் 2-வது இடத்தை பெற்றோம். மக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் அங்குள்ள எங்கள் கட்சி அலுவலகத்தை தேடித்தான் வருவார்கள்.

இந்த தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைந்துள்ளது. அதில் தொகுதியை தி.மு.க. வுக்கு கொடுப்பது என்று அறிவித்துவிட்டார்கள். அது நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் எங்களை சந்தித்து பேசினார்கள். அப்போது தவறுகளை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

எங்கள் கட்சி மேலிடமும் எங்களிடம் இதுதொடர்பாக பேசியது. இடைத்தேர்தல் சம்பந்தமாக மாறுபட்ட கருத்து இருந்தாலும் அரசியல் போராட்டத்தில் பாரதீய ஜனதாவோடு சேர்ந்து நிற்கும் வேட்பாளர்களை தோற்கடிக்க முழுவீச்சோடு பணியாற்ற தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனை ஆதரிக்கும் முடிவினை எடுத்துள்ளோம். இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. நாங்கள் அரசியல் ரீதியாக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story