புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டி


புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டி
x
தினத்தந்தி 22 March 2019 11:30 PM GMT (Updated: 22 March 2019 10:01 PM GMT)

புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கொளுத்தும் வெயிலில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். என்.ஆர். காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இதையொட்டி வேட்பாளரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிர பரிசீலனை மேற்கொண்டது. இறுதியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்தை வேட்பாளராக தேர்வு செய்தது. இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

நேற்று காலை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வைத்திலிங்கம் தயாரானார். இதையொட்டி கட்சி அலுவலகத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்தனர். தொண்டர்களும் ஏராளமான அளவில் குவிந்தனர்.

அங்கிருந்து பகல் 12.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு தொண்டர்கள் புடைசூழ கொளுத்தும் வெயிலில் வேட்பாளர் வைத்திலிங்கம், முதல் அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். வழியில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும் தேர்தல் அதிகாரியான கலெக்டர் அருணிடம் வேட்பாளர் வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்தபின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறும்போது, ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கடந்த முறை 2 பேர் எம்.பி.யாக அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கடந்த காலங்களில் செய்த சாதனையை சொல்லிவிட்டு இந்த தேர்தலைப்பற்றி பேசட்டும். காங்கிரசின் வெற்றி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வெற்றியாக இருக்கும். மக்கள் நினைக்கும் காரியத்தை செய்ய உரிமையை பெற்று தருவதே எனது நோக்கம்’ என்று குறிப்பிட்டார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ‘முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர் என பல பதவிகளை வகித்த அனுபவம் பெற்றவர் வைத்திலிங்கம், 5 பேர் பட்டியலை அளித்ததில் வைத்திலிங்கத்தைதான் ராகுல்காந்தி தேர்வு செய்தார். அவரது வெற்றிக்கு பாடுபடுவோம்’ என்றார்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த கட்சியின் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி போட்டியிடுவார் கட்சியின் தலைவர் ரங்கசாமி நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கதிர்காமம் முருகன் கோவிலில் டாக்டர் நாராயணசாமியின் வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டார். அவருடன் வேட்பாளர் நாராயணசாமியும் வந்தார்.

அங்கு தேர்தல் அதிகாரியான கலெக்டர் அருணிடம் வேட்புமனுவை நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடனிருந்தனர். ஏராளமான என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் திரண்டு வந்திருந்தனர்.

Next Story