நாடாளுமன்ற தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்


நாடாளுமன்ற தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 22 March 2019 10:52 PM GMT (Updated: 22 March 2019 10:52 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு முகாமை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள்துறை சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டாக்டர் எஸ்.பிரபாகர் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பது குறித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 17 ஆயிரம் பேர் உள்ளனர். இவற்றில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 2,800 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எளிதாக வாக்கு அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல சாய்வு தளம் மற்றும் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கண்பார்வையற்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பிரெய்லி எழுத்து மூலம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் சீட்டுகள் வழங்க உள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்கனவே பிரெய்லி வசதி உள்ளது. வேட்பாளர்களின் பெயர் மற்றும் குறியீட்டுடன் வாக்குப்பதிவு எந்திரத்தில் வலது பக்கத்தில் பிரெய்லி எழுத்து வடிவில் அச்சிட்டப்பட்ட சீட்டு உள்ளது. இதில் பார்வையற்றவர்கள் எளிதாக வாக்களிக்க முடியும். எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் பிரியாராஜ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Next Story
  • chat