தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் சரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் ஆலோசனை கூட்டம்


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் சரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 March 2019 10:15 PM GMT (Updated: 22 March 2019 10:58 PM GMT)

மும்பையில் சரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி,

மும்பையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில் நாட்டின் முக்கிய வழித்தட சரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பரிமாற்ற முனையம் அமைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றும் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக துறைமுகத்தின் மிதவை ஆழம் 14.50 மீட்டர் உயர்த்தப்பட்டு சரக்குதளம் 9 மற்றும் 10 சரக்குபெட்டக முனையமாக மாற்றப்பட உள்ளது. 2-வது கட்டமாக சரக்கு தளங்கள் மிதவை ஆழம் 15.50 மீட்டராக உயர்த்தப்பட உள்ளது. 3-வது கட்டமாக 1,000 மீட்டருக்கு மேலான நீளமுள்ள சரக்குபெட்டக தளம் 18 மீட்டர் மிதவை ஆழத்துடன் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் நிறைவு பெறும்போது, முக்கிய வழித்தட சரக்குபெட்டக கப்பல்கள் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பரிமாற்ற முனையமாக செயல்படுவது மட்டுமல்லாமல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கான சரக்குபெட்டகங்களையும் கையாளும். தற்போது வ.உ.சி. துறைமுகம் 7.03 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு உள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் 1 மில்லியன் சரக்குபெட்டகங்களை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் துறைமுக மொத்த சரக்கு கையாளும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் பேசும்போது, துறைமுகத்தில் கப்பல்களுக்கான பல்வேறு கட்டணங்கள் குறைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

Next Story