அடிப்படை வசதி கோரி, கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
அடிப்படை வசதி கோரி கோம்பைப்பட்டி கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு ஒன்றியம் கோம்பைப்பட்டி கிராமத்தில் 1,500 வீடுகள் உள்ளன. மொத்தம் 3 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இங்கு குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், ரெட்டியபட்டியிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை கோம்பைப்பட்டிக்கு மாற்ற வேண்டும், தேசிய ஊரக வேலைக்கு வீட்டு வரி ரசீது கேட்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டினர்.
பின்னர் அவர்கள் ஊர் மந்தையில திரண்டு கருப்பு கொடி ஏந்தியவாறு ‘புறக்கணிப்போம்..புறக்கணிப்போம்...தேர்தலை புறக்கணிப்போம்’ என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, ஊராட்சி செயலாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story