வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டு கடன் பெற்று ரூ.2 கோடி மோசடி - பெண் உள்பட 4 பேர் கைது


வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டு கடன் பெற்று ரூ.2 கோடி மோசடி - பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2019 4:29 AM IST (Updated: 23 March 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டு கடன் பெற்று ரூ.2 கோடி வரை மோசடி செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவையில் உள்ள ஒரு வங்கியில் பெண் உள்பட 4 பேர் வீட்டு கடன் கேட்டு விண்ணப்பம் அளித்தனர். அதற்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களையும் வங்கியில் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வங்கியும் ரூ.40 லட்சம் கடன் வழங்கியது. அவர்கள் அந்த கடனுக்கான தவணை தொகையை சில மாதங்கள் மட்டும் திருப்பி செலுத்தினார்கள்.

அதன் பின்னர் செலுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் அளித்த ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அவை போலியானவை என்பது தெரியவந்தது. கடன் பெற்ற பெண் உள்பட 4 பேரும் வேறு சிலரின் ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது 4 பேரும் வங்கியில் கொடுத்தது போலி ஆவணங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக கோவை கணபதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 37), மீனா என்கிற நிஷா (27), ரத்தினபுரியை சேர்ந்த பிரபாகரன் (27), சிவானந்தா காலனியை சேர்ந்த பிரவீண் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது இதுபோல் போலி ஆவணங்கள் தயாரித்து கோவையில் உள்ள 7 வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அவர்கள் ரூ.2 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story