பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கு.சண்முக சுந்தரம் வேட்புமனு தாக்கல்


பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கு.சண்முக சுந்தரம் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 10:59 PM GMT)

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கு.சண்முகசுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பொள்ளாச்சி,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறுகின்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிக்குமாரிடம், தி.மு.க. வேட்பாளர் கு.சண்முக சுந்தரம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன், காங்கிரஸ் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், கொ.ம.தே.க. மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். வேட்பாளர் சண்முகசுந்தரம் மட்டும் 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளரான அவரது மனைவி வனிதா 2 வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, சாமிநாதன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தென்றல்செல்வராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பொள்ளாச்சி நாடாளுமன்றதொகுதி தி.மு.க. வேட்பாளர் கு.சண்முக சுந்தரம் தனது வேட்பு மனுவுடன், தனது சொத்து மதிப்பு பட்டியலை தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:- வேட்பாளரின் அசையும் சொத்து ரூ. 2 கோடியே 17 லட்சத்து 62 ஆயிரத்து 180. அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 87 லட்சம். வாரிசு அடிப்படையில் வரப்பெற்ற சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 90 லட்சம். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கப்பட்ட கடன் ரூ. 1 கோடியே 5 லட்சத்து 274 ஆகும்.

இதனை தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் கு.சண்முக சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு நன்மைகள் செய்யவும், தமிழகத்திற்கு உரிமைகளை கேட்டு பெறுவதற்கு மத்தியில் உள்ள பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும், ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும். இந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் நடைபெற இருக்கிற ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். என்னை வெற்றி பெற செய்தால் ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். பொள்ளாச்சியில் இருந்து நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் ரெயில்சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறை தோட்ட தொழிலாளர்களுக்கு மேலும் ஊதிய உயர்வு பெற்றுக் கொடுக்க நாங்கள் முயற்சி செய்வோம்.

தென்னைநார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிறப்பு காப்பீட்டு திட்டம் பெற்று தர முயற்சி மேற்கொள்ளப்படும். மேற்கு புறவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்தி தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் நிரந்தரமாக செயல்பட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். குறிப்பாக பொள்ளாச்சியில் 300 பெண்களை சீரழித்த சதிகார கும்பலின் உண்மை முகங்களை நாட்டு மக்களுக்கு காட்டுவதற்கு முழுமுயற்சி எடுக்கப்படும். இந்த வழக்கில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் வால்பாறையை சேர்ந்த பாலாஜி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று ஒரு நாளில் தி.மு.க. வேட்பாளர் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

Next Story