தி.மு.க.வை வன்முறை கட்சி என்று கூறுவதா? டாக்டர் ராமதாசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்


தி.மு.க.வை வன்முறை கட்சி என்று கூறுவதா? டாக்டர் ராமதாசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 22 March 2019 11:17 PM GMT (Updated: 22 March 2019 11:17 PM GMT)

தி.மு.க.வை வன்முறை கட்சி என்று கூறுவதா? என்று டாக்டர் ராமதாசுக்கு, மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.மணி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்டு ரோட்டில் நேற்று இரவு நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் மாதையன், மாவட்ட துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, முனிராஜ், லட்சுமி மாது, முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பார் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர் களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட நேரத்தில் இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் தமிழக கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர். மாறாக அவர்கள் ஆட்சியை அகற்ற கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் இந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர் செல்வம் தலை மையில் இருந்தவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசபையில் வாக்களித்தவர்கள்.

ஆனால் அந்த 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படவில்லை. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. அதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் மாவட்டத்திற்கும் தர்மபுரி-அரூர் சாலை 4 வழிச்சாலையாக அமைக்கும் திட்டம், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தரம் உயர்த்தப்படும், பணியாளர்களின் நலன் பாது காக்கப்படும். தடுப்பணைகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட அறிக்கைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

கருணாநிதி 5 முறை முதல்- அமைச்சராக இருந்துள்ளார். அவர் ஆட்சிக்கு வரும் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பார். அவர் வழியில் அதை நாங்களும் பின்பற்றுவோம். இன்று அ.தி.மு.க. சார்பில் ஒரு கூட்டணி அமைத்துள்ளார் கள். அது எத்தகைய கூட்டணி என்பது மக்களுக்கு தெரியும்.

அதே நேரத்தில் நாம் 3 ஆண்டுகளாக ஒரு கூட்டணி வைத்து இருக்கிறோம். இது மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடும் கூட்டணி. பா.ஜனதா அ.தி.மு.க.வுடன் கொள்கை ரீதியாக கூட்டணி வைக்க வில்லை. மாறாக அச்சுறுத்தி கூட்டணி ஏற்படுத்தி உள்ளார்கள். அ.தி.மு.க.வை நம்மை விட அதிகமாக விமர்சித்தவர்கள் பா.ம.க. அவர்கள் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல்கள் புகார்களை கவர்னரிடம் கூறியவர்கள் பா.ம.க.வினர். தி.மு.க.வை வன்முறை கட்சி என்று டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறார். சட்டசபையில் ஒரு முறை ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினார்.

அவர் பேசும் போது, பெட்ரோல் குண்டு வீசி, கல் எறிந்து, பொது சொத்துக்கு சேதம் விளைவித்து, அப்பாவி மக்களின் உயிர் இழக்க செய்து, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் விதமாக டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருகிறார்கள் என்றார். பா.ம.க. வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார். அந்த கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளார்கள்.

இந்த வன்னிய சமுதாய மக்களுக்காக இடஒதுக்கீட்டை பெற்று தந்தது தி.மு.க. நீங்கள் வன்முறை கட்சி என்று தி.மு.க.வை கூறினால் அது கலைஞருக்கு செய்ய கூடிய துரோகம் ஆகும். வன்னிய சமுதாய மக்களுக்கு செய்ய கூடிய துரோகம் ஆகும். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் தொடர் பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செய லாளர் தேவராஜன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய லாளர்கள் ஜெயந்தி, ஜானகி ராமன், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு தலைவர் குபேந்திரன், மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகி கள் கலந்து கொண்டனர். முடிவில் கடத்தூர் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

Next Story