நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-கொ.ம.தே.க. வேட்பாளர்கள் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல்


நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-கொ.ம.தே.க. வேட்பாளர்கள் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 23 March 2019 5:57 AM IST (Updated: 23 March 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் உள்பட 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் ரமேஷ் என்பவர் காந்தி வேடம் அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அடுத்த 2 நாட்கள் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் டி.எல்.எஸ். காளியப்பன், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆசியா மரியத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் உடன் வந்தனர். தொடர்ந்து காளியப்பனுக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.டி.தனகோபால் ஆகியோர் உடன் வந்தனர். சின்ராஜூக்கு மாற்று வேட்பாளராக நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க. செயலாளர் மாதேஸ்வரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல் இந்திய கணசங்கம் கட்சி சார்பில் முத்துசாமி, சுயேச்சை வேட்பாளர்களாக ராமசாமி, நல்லதம்பி, நடராஜன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். எனவே இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.

தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் வேட்புமனு தாக்கல் நிகழ்வு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Next Story