குமரியில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை: வெளிநாட்டு மதுபாட்டில்கள் சிக்கின விடுதி உரிமையாளரிடம் ரூ.1¼ லட்சமும் பறிமுதல்


குமரியில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை: வெளிநாட்டு மதுபாட்டில்கள் சிக்கின விடுதி உரிமையாளரிடம் ரூ.1¼ லட்சமும் பறிமுதல்
x

குமரியில் நடந்த வாகன சோதனையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள் சிக்கின. மேலும் விடுதி உரிமையாளரிடம் ரூ.1¼ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை ரூ.76¾ லட்சம் மற்றும் 13 வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று தாசில்தார் ஜெகதா தலைமையில் நிலையான கண்காணிப்பு குழுவினர் கொட்டாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 190 இருப்பதை கண்டு பிடித்தனர்.

விசாரணையில் காரில் வந்தவர் நாகர்கோவிலில் உள்ள விடுதி உரிமையாளரான சிவராஜ் என்பதும், ஆவணம் எதுவும் இல்லாமல் பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தோவாளை தனி தாசில்தார் சொக்கலிங்கம், தலைமையிடத்து தாசில்தார் முருகன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் துணை தாசில்தார் சரசுவதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் நியூட்டன், ஏட்டுகள் ராஜேஷ்குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய நாகர்கோவில் தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பயணி வைத்திருந்த பையில் விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானம் பாட்டில், பாட்டிலாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 17 மதுபாட்டில்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.35 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பையின் உரிமையாளர் யார் என்று விசாரித்தபோது, அது நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ரிச்சர்டு (வயது 35) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இவர் சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் வேலை செய்கிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் நண்பர்களுக்காக விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்களை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரிச்சர்டும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிச்சர்டை கைது செய்தனர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Next Story