காட்சிக்கு வைக்கப்பட்ட நிஜாம் கால தபால்தலைகள்
ஐதராபாத் நிஜாம்களின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட தபால்தலைகள் டெல்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
உலகில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தபால்தலை முதல், ஐதராபாத் நிஜாம்களின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட தபால்தலைகள் வரை சமீபத்தில் டெல்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
அங்குள்ள பிகானிர் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் அரிய தபால்தலைகளுடன், தபால் அட்டைகள், கடிதங்களும் வைக்கப்பட்டிருந்தன.
‘ஒரு கனவானின் சொத்து: ஐதராபாத் நிஜாமின் தபால்தலைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில், ஏவாரி என்ற குடும்பத்தினர் சேகரித்து வைத்துள்ள அரிதிலும் அரிதான தபால்தலைகள் இடம்பெற்றிருந்தன.
இக்கண்காட்சியில் இடம்பெற்ற சுமார் 30 லட்சம் தபால்தலைகளும், ஐதராபாத்தின் ஏழாவது மற்றும் கடைசி நிஜாமான மீர் உஸ்மான் அலி ஆட்சிக் காலத்தில் தபால்துறை தலைவராகப் பணியாற்றிய நவாப் இக்பால் ஹுசைனால் சேகரிக்கப்பட்டவை. அவரது பேரனால் அந்த தபால்தலைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன.
டெல்லியில் காட்சிக்கு வைக்கப்பட்ட தபால்தலைகளில், 158 தபால்தலைகள் முதல்முறையாக கண்காட்சியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தபால்முறைக்கு மாறிய முதல் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான ஐதராபாத், 1869-ம் ஆண்டு முதல், 1949-ல் இந்தியாவுடன் இணையும் வரை சொந்தமாக தபால்தலைகளை அச்சிட்டு வந்தது. ஆனால் அது முஸ்லிம் சமஸ்தானம் என்பதால், தபால்தலைகளில் மனித உருவங்களைப் பயன்படுத்தவில்லை.
அதற்கு மாறாக, அழகிய கட்டிடங்கள், இயற்கை நிலப்பரப்புகள், கலாசார பாரம்பரிய இடங்கள் போன்றவை ஐதராபாத் தபால்தலைகளில் இடம்பிடித்தன.
‘‘தலைவர்களின் உருவங்களைப் பொறித்த மற்ற நாடுகளைப் போலவோ, இங்கிலாந்து ராணியின் முகம் பொறித்த ‘பென்னி பிளாக்’ போலவோ ஐதராபாத் அரசால் வெளியிடப்பட்ட தபால்தலைகள் இல்லை’’ என்று டெல்லி கண்காட்சி அமைப்பாளரான பிரமோத்குமார் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியில், உலகின் முதல் தபால்தலையான, 1840-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘பென்னி பிளாக்’கும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story