வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த 8 அடி நீள முதலை தீயணைப்பு வீரர்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்


வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த 8 அடி நீள முதலை தீயணைப்பு வீரர்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்
x
தினத்தந்தி 23 March 2019 10:45 PM GMT (Updated: 23 March 2019 7:17 PM GMT)

கும்பகோணம் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீள முதலையை தீயணைப்பு வீரர்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை பகுதியில் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு முதலை வந்துவிடும். இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் எப்போதும் ஒருவித பீதியுடன் இருப்பார்கள். இந்த நிலையில் அணைக்கரையில் உள்ள பள்ளிக்கூட தெருவில் வசித்து வரும் நாகலெட்சுமி என்பவர் வீட்டின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 அடி நீளம் உள்ள முதலை ஒன்று புகுந்தது.

நேற்று காலை நாகலெட்சுமி வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த முதலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த முதலை அங்கும், இங்கும் சுற்றித்திரிவதை பார்த்த அவர் மிரண்டு பயத்தில் அங்கிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் பின்புறத்தில் பதுங்கி இருந்த முதலையை லாவகமாக பிடித்து கயிறு மூலம் கட்டி அங்கிருந்து வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் அந்த முதலையை அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். பிடிபட்ட முதலை 8 அடி நீளமும், 200 கிலோ எடையும் இருந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. தற்போது ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் முதலைகள் இரை தேடி ஆற்றை ஒட்டி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன. இதனால் எந்த நேரத்தில் முதலைகள் இங்கு வருமோ? என்று நாங்கள் ஒருவித பீதியுடனேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான முதலைகளால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story