கஜா புயலால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி குறைந்தது


கஜா புயலால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி குறைந்தது
x
தினத்தந்தி 23 March 2019 10:45 PM GMT (Updated: 23 March 2019 7:31 PM GMT)

கஜா புயலால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி குறைந்துள்ளது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி உப்பு உற்பத்தியில் மாநில அளவில் 2-ம் இடத்தை வகிக்கிறது.இங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் உணவு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கப்படும். ஆண்டுக்கு சராசரியாக 5 அல்லது 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி வீசிய கஜா புயலால் உப்பள பகுதியில் கடல் சேறு படிந்ததால் உப்பு உற்பத்திக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன.

இவற்றில் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தங்கள் உப்பளத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி குறைந்தது. தற்போது சுமார் 35 சதவீத பரப்பில் மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இது உப்பு விளைச்சலை அதிகரிக்க செய்யும் அளவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும் ஒரு மூட்டை (நூறு கிலோ) உப்பின் கொள்முதல் விலை கடந்த ஆண்டில் ரூ.600 ஆக இருந்தது.

தற்போது முன்பு எப்போதும் இல்லாத அளவில் ரூ.900 முதல் ரூ.1000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் உப்பு உற்பத்தி குறைந்ததால் பெயரளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தியைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. சேதமடைந்த உப்பளங்களை சீரமைக்க மத்திய அரசிடம் எதிர்பாத்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. லாபகரமான கொள்முதல் விலையும், உற்பத்திக்கு ஏற்ற பருவ நிலையும் இருந்த போதிலும் தேவைகேற்ப உப்பை உற்பத்தி செய்ய வழியில்லாததால், உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.

Next Story