“நலத்திட்டங்கள் தொடர என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு


“நலத்திட்டங்கள் தொடர என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2019 4:45 AM IST (Updated: 24 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

“நலத்திட்டங்கள் தொடர என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்“ என கல்லிடைக்குறிச்சியில் நடந்த கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

அம்பை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அம்பை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் கல்லிடைக்குறிச்சி நகரப்பஞ்சாயத்து திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அமைப்பு செயலாளர் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-

1972-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியுடன் தொடர்பில் இருக்கிறது எனது குடும்பம். 9-வது முறையாக தற்போது வாக்கு கேட்கிறேன். அதற்காக மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, தற்போது வாய்ப்பளித்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் நன்றி. நாட்டை பாதுகாப்பாக வைப்பதற்கு நடைபெறும் தேர்தல் இது. யாரிடம் இருந்தால் நாடு பாதுகாப்பாகவும், வலிமையானதாகவும் இருக்கும் என்று நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். 2011-ம் ஆண்டு சேரன்மாதேவி சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளேன். மேல்சபை எம்.பி.யாக இருந்தபோது நமது மாவட்டத்தில் அதிக நிதிகளால் குடிநீர் தொட்டி, திருமண மண்டபங்கள், சத்துணவு கூடம், பயணியர் நிழற்குடை ஆகியவை கட்டிக் கொடுத்துள்ளேன். மேலும் சாலை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். இந்த தொகுதியில் நாம் தனியாக நின்றபோதே ஒரு லட்சத்து 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். தற்போதுள்ள கூட்டணியால் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். நெல்லை தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவேன். தொடர்ந்து 47 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் இந்த தொகுதியில் உழைத்துக் கொண்டிருக்கிறது. நலத்திட்டங்கள் தொடர என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். உங்களுக்காக என்றைக்கும் ஓடோடி வருபவர்களில் ஒருவனாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பேசுகையில், “எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட நான் இத்தொகுதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்துள்ளேன். முந்தைய சேரை சட்டமன்ற தொகுதி தான் இது. இதில் நான் செய்யாத பணிகளே இல்லை. குடிநீர் வசதி, சாலை வசதி, பஸ் வசதி இப்படி அடிப்படை வசதிகளை முழுவதுமாக செய்துள்ளேன். நான் முதலில் தேர்தல் போட்டியிடும்போது 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2-வது முறையாக 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 3-வது முறையாக 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றேன். அந்த வாக்கு வித்தியாசம் இந்த தொகுதியில் கிடைக்க வேண்டும். நான் செய்ததை போலவே எனது மகனும் எல்லா பணிகளையும் செய்வார். என்னை மனதில் வைத்து வாக்களியுங்கள்“ என்றார்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் முத்துகருப்பன், பிரபாகரன், விஜிலா சத்யானந்த், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், தே.மு.தி.க. தொகுதி பொறுப்பாளர் அய்யப்பன், பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளர் ராமராஜ் பாண்டியன், நாடார் கூட்டமைப்பு அச்சுதன் நாடார், த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் ஜோதி, புதிய தமிழகம் கணேசன், அ.தி.மு.க.வை சேர்ந்த சங்கரநாராயணன், மாடசாமி, கருத்தபாண்டி, பிராங்களின், மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் பேசினர்.

அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, பார்வதி பாக்கியம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, இளைஞர் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், அம்பை நகர செயலாளர் அறிவழகன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story