விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் வாக்கு சேகரிப்பு


விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 24 March 2019 4:00 AM IST (Updated: 24 March 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் சின்னப்பன் நேற்று விளாத்திகுளம் அருகே முத்துகுமாரபுரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் அனைத்து தெருக்களிலும் கொளுத்தும் வெயிலிலும் நடந்து சென்று, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அவர் முத்துகுமாரபுரம், வைப்பார், மேல்மாந்தை, வேம்பார், அரியநாயகிபுரம், ஓ.லட்சுமிநாராயணபுரம், பல்லாகுளம், இலந்தைகுளம், நெடுங்குளம், வேடபட்டி, சங்கரலிங்கபுரம், சல்லிசெட்டிபட்டி, சின்னவநாயக்கன்பட்டி, சேதுபுரம் ஆகிய கிராமங்களிலும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பிரசாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் பேசுகையில், அ.தி.மு.க. அரசு பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு, எண்ணற்ற நலத்திட்ட பணிகளை நிறைவேற்றி வருகிறது. இந்த பணிகள் தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறினார்.

அவருடன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமி, ஜெயலலிதா பேரவை குட்லக் செல்வராஜ், புதூர் முன்னாள் யூனியன் தலைவர் தனஞ்செயன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன், வேடபட்டி கிளை செயலாளர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் கடற்கரைவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக விளாத்திகுளம் அருகே அயன்கரிசல்குளத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது, அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story