நாமக்கல்லில் பேரிடர் கால முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் ராணுவ அதிகாரி தலைமையில் நடந்தது


நாமக்கல்லில் பேரிடர் கால முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் ராணுவ அதிகாரி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 9:00 PM GMT)

நாமக்கல்லில் பேரிடர் காலங்களுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ராணுவ அதிகாரி தீபக் மண்டல் தலைமையில் நடந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பேரிடர் காலங்களில் எடுக்கப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு இந்திய ராணுவத்தின் 174 படைப்பிரிவின் அதிகாரி தீபக் மண்டல் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் புயல், மழை, வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு போர்க்கால நடவடிக்கைகளுக்காக அனைத்துத்துறைகளின் மூலம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் ராணுவ அதிகாரி தீபக் மண்டல், நாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பேரிடர் காலங்களில் ராணுவ படைப்பிரிவின் அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவதோடு தேவைப்பட்டால் அதிநவீன பயிற்சி பெற்ற வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை பாதுகாப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய், உள்ளாட்சி நிர்வாகங்கள், போலீஸ், நெடுஞ்சாலை, தீயணைப்பு, சுகாதாரம், பொதுப்பணி, கூட்டுறவு, மின்சாரம், ஊரக வளர்ச்சி, கனிமம் மற்றும் சுரங்கம், வேளாண்மை, குடிநீர் வடிகால் வாரியம் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story