மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 March 2019 4:30 AM IST (Updated: 24 March 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில், மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீரென இறந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தை அடுத்த பாரதிபுரம் திட்டாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கனகா (25).

கர்ப்பிணியாக இருந்த கனகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் மாலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நள்ளிரவு 1 மணியளவில் கனகாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலை யில் அதிகாலை 4 மணியளவில் கனகா திடீரென உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து கனகாவின் கணவர் பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். கனகாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story