சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது


சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது
x
தினத்தந்தி 23 March 2019 10:30 PM GMT (Updated: 23 March 2019 9:37 PM GMT)

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவில் சப்தஸ்தான விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இரவு சாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. கடந்த 21்-ந்தேதி பங்குனி உத்திர தீத்தவாரி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு நேற்று காலை நடைபெற்றது.

பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

அய்யம்பேட்டை சவுராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்மன் சக்கரவாகேஸ்வரர் எழுந்தருள மேளதாளங்கள் முழங்க ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனமும் சாமி தரிசனமும் செய்தனர். நேற்று அய்யம்பேட்டை எல்லைவரை சென்று பிறகு மாகாளிபுரம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய ஊர்களில் வலம் வந்தது. இரவு குடமுருட்டி ஆற்றில் வானவேடிக்கை நடைபெற்றது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) இலுப்பகோரை கிராமத்தில் சாமி வலம் வந்து பின்னர் அய்யம்பேட்டை வந்தடைகிறது. தொடர்ந்து மதகடி பஜார் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

இன்று மாலை சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு மாலை 4 மணி முதல் பூ போடும் நிகழ்ச்சி முடிவடையும் வரை தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வரும் வாகனங்கள் திருவையாறு, கபிஸ்தலம் பாபநாசம், வழியாக கும்பகோணம் சென்றடையும். கும்பகோணத்திலிருந்து வரும் வாகனங்கள் பாபநாசம், கபிஸ்தலம் திருவையாறு வழியாக தஞ்சையை சென்றடையும்.

Next Story