கும்பகோணத்துக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.10-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை


கும்பகோணத்துக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.10-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 23 March 2019 10:30 PM GMT (Updated: 23 March 2019 9:41 PM GMT)

கும்பகோணத்துக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.10-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கும்பகோணம்,

கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்திய உணவு வகைகளில் வெங்காயத்துக்கு தனி இடம் உண்டு. இதனால் பெரிய வெங்காயத்தின் தேவை பரவலாக இருந்து வருகிறது. கடந்த 1 ஆண்டுக்கு முன் கர்நாடகம், மகராஷ்டிராவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பெரிய வெங்காயம் உற்பத்தி வெகுவாக குறைந்தது. இதனால் பெரிய வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக பெரிய வெங்காயம் விளைச்சலுக்கு ஏற்ற காலநிலை, மழைபொழிவு ஆகியவை இருந்ததால் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் கர்நாடகம், மகராஷ்டிராவில் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு கொண்டுவரப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு 3 மடங்கு உயர்ந்தது.

ரூ.10-க்கு விற்பனை

வட மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு ஏராளமான லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தாராசுரம் மார்க்கெட்டில் அதிக அளவில் பெரிய வெங்காயம் தேக்கமடைந்துள்ளதாலும், முகூர்த்த நாட்கள் இல்லாததாலும் விற்பனை குறைந்துள்ளது. இதனால் வெங்காய மூட்டைகள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே தேங்கி கிடக்கிறது. எனவே மூட்டைகளில் உள்ள வெங்காயம் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story