“காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


“காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 24 March 2019 12:09 AM GMT (Updated: 24 March 2019 12:09 AM GMT)

காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியில் தான் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்ததாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், மாநில தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து தி.மு.க.வினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் அது குறித்து அவர்களின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக என்பதை முதலில் கேட்க வேண்டும். நான் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யின் ராஜ்யசபா வருகை பதிவேட்டுக்கு நான் பாஸ் மார்க் போட மாட்டேன். மிக குறைந்த அளவில் ராஜ்யசபாவிற்கு சென்ற 3 பேரில் கனிமொழியும் ஒருவர்.

பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து வருகிறார். அது தவறான பிரசாரம். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. பயிர் காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் அதிகம் பயனடைந்த மாவட்டங்களில் தூத்துக்குடியும் ஒன்று. ஆனால் காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியில் தான் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்தது.

நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜனதா கட்சி. ஆனால் தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று அறிவித்து உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க. எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுகிறது என்று தெரியவருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைபாடு இருக்கும். கூட்டணி சேர்ந்து விட்டார்கள் என்பதற்காக கட்சியின் நிலைபாட்டை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் பொது எதிரியை வீழ்த்தவே நாங்கள் கூட்டு சேர்ந்து உள்ளோம்.

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்கிறார்கள். சோபியா விவகாரத்தை தொடர்பு படுத்தி கருத்து சுதந்திரம் குறித்து பேசுகிறார்கள். கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்ட காலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கருத்து சுதந்திரம் பற்றி பேச இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. சோபியா விவகாரத்தில் சட்டம் என்ன செய்யுமோ அதனை செய்யும். எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் காழ்ப்புணர்ச்சியும் பகை உணர்வும் இல்லை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. கூட்டணி குறித்து தவறான கருத்துகளை பேசுகிறார். அவருக்கு யார் எழுதி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இவர்கள் சேர்ந்து இருக்கும் போது இலங்கை தமிழர்களின் நிலைபாடு என்ன?. தற்போது தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி எம்.பி., மற்றும் டி.ஆர்.பாலு, தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ராஜபக்சேவிடம் சென்று சிரித்து பேசி பரிசு பொருட்கள் வாங்கி வந்தார்கள். அதற்கு மு.க.ஸ்டாலின் முதலில் பதில் சொல்லட்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சூரப்புலி வைகோ தி.மு.க. குறித்து பேசியது என்ன?. அவருக்காக தீக்குளித்து தற்கொலை செய்த தொண்டர்களின் தியாகத்தில் நின்று கொண்டு தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக வேண்டும் என்று பேசுகிறார்.

எங்களின் கூட்டணி நியாயமான கூட்டணி. மக்களுக்கு நல்லது செய்கின்ற கூட்டணி. எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தூத்துக்குடி மக்கள் எனக்கு வெற்றியை தருவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story