நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 3 இறைச்சி கடைகளுக்கு அபராதம்


நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 3 இறைச்சி கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 2:45 PM GMT)

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடை உத்தரவு குமரி மாவட்டத்தில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் நாகர்கோவிலில் சில இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து நகர்நல அதிகாரி கின்ஷால் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று நாகர்கோவிலில் பல்வேறு இறைச்சி கடைகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். பொதுப்பணித்துறை அலுவலக சாலை, பெருவிளை, ஒழுகினசேரி, வடசேரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில் இந்த சோதனை நடந்தது.

சோதனையின் போது பெரும்பாலான இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக தாமரை இலைகள் மற்றும் வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகளை அந்த கடைக்காரர்கள் எங்கிருந்து வாங்கினார்கள்? என்று விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் சம்பந்தப்பட்ட 3 கடைகளுக்கும் தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story