வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்தது


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 25 March 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் நேற்று நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவதற்கு தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 11,780 ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறு பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தஞ்சை தாலுகாவில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு காலை ஒரு பிரிவினருக்கும், மாலை மற்றொரு பிரிவினருக்கும் என 2 கட்டமாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொலைக்காட்சி மூலமும் குறும்படங்கள் மூலமும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரம் தொடர்பான செயல்விளக்கப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி ஆகியோர் பார்வையிட்டனர். இவர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி அடுத்த மாதம் நடைபெறுகிறது.

இதே போல் திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், பாபநசாம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களிலும் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

Next Story