ஈரோடு காந்திஜி ரோட்டில் புழுதி பறப்பதால் பொதுமக்கள் கடும் அவதி


ஈரோடு காந்திஜி ரோட்டில் புழுதி பறப்பதால் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 25 March 2019 3:45 AM IST (Updated: 25 March 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு காந்திஜி ரோட்டில் புழுதி பறப்பதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு காந்திஜி ரோட்டில் வருமான வரித்துறை அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், தலைமை தபால் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஓட்டல்கள், கடைகள் உள்ளன. மேலும், ஈரோட்டில் இருந்து சென்னிமலை, சூரம்பட்டி, அவல்பூந்துறை, அறச்சலூர், மொடக்குறிச்சி, சோலார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் காந்திஜி ரோடு வழியாக சென்று வருகின்றன. அங்கு பகல் நேரத்தில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைப்பதற்காக காந்திஜி ரோட்டில் குழி தோண்டி மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்று வரும்போது காற்றில் புழுதி பறக்கிறது. அடுத்தடுத்து தொடர்ந்து வாகனங்கள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை மூட்டத்தைபோல புழுதி படலமாக காட்சி அளிக்கிறது. மேலும், தலைமை தபால் அலுவலகம் அருகில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதில் வாகனங்கள் சிக்காமல் இருக்க, பேரிகார்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

கடைகளின் முன்புள்ள பொருட்களில் புழுதி படிந்து கிடக்கிறது. இதனால் விற்பனை பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர். குறிப்பாக ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளுக்கு முன்பு அடிக்கடி தண்ணீர் தெளித்து வருகிறார்கள். இருந்தாலும், மற்ற பகுதிகளில் இருந்து புழுதி கிளம்புகிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் மூச்சு திணறலும் ஏற்படுகிறது. சாலையில் புழுதி பறப்பதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க புதிய சாலை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை தினமும் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story