கணவாய்புதூர் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேருக்கு அபராதம்


கணவாய்புதூர் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 25 March 2019 4:00 AM IST (Updated: 25 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

கணவாய்புதூர் வனப் பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெலாபள்ளிகோம்பை, பொனகாடு, காஞ்சேரி காப்புக்காடு, உள்கோம்பை, கணவாய்புதூர் காப்புக்காடு, லோக்கூர் காப்புக்காடு உள்ளிட்ட வனப்பகுதி ஏற்காடு மலைத்தொடரில் உள்ளது.

இந்த வனப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதனால் காட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடியும், கம்பி கொண்டு வலை வைத்தும் வேட்டையாடி வருவதாகவும், இதனால் வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட வன அலுவலர் பெரியசாமிக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து பெரியசாமி உத்தரவின் பேரில் நேற்று அதிகாலை 4 மணியளவில் டேனிஷ்பேட்டை வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனவர் ராமகிருஷ்ணன், வனக்காப்பாளர் காளியப்பன் மற்றும் வனத்துறையினர் கணவாய்புதூர் காப்புக்காடு மாதேஸ்வரன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 6 பேர் வன விலங்களை வேட்டையாட வலை விரித்துக்கொணடிருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்து பிடித்து டேனிஷ்பேட்டை வன அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏற்காடு பட்டிப்பாடி வேலூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 43), கே.மோரூர் கோவிந்தராஜ் (31), ராமமூர்த்திநகர் அருண்குமார் (36), சசிகுமார் (28), முத்து மகன் குமார் (33), மணி மகன் குமார் (30) என தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, 6 பேருக்கும் தலா ரூ.12,500 வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Next Story