40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி: “மு.க.ஸ்டாலினின் பொய்யுரைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்” ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
மு.க.ஸ்டாலின் பொய்யுரைகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும், அரசின் சாதனை திட்டங்களால் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்றும் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை,
மதுரை விமானம் நிலையம் வந்த துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ராஜ்சத்யன் உள்பட கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது அங்கு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
அனைவரும் தேர்தல் பணியினை சிறப்பாக ஆற்ற வேண்டும். அரசு செயல்படுத்தி உள்ள நலத்திட்டங்களை மக்களிடம் முழு மூச்சாக கொண்டு செல்ல வேண்டும். மேலும் மக்களுக்கு தேவையானவற்றை தான் தேர்தல் அறிக்கையாக கொடுத்து உள்ளோம். அதனையும் மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற்று தருவோம். ஜெயலலிதாவின் ஆசியாலும், அரசின் திட்டங்களாலும் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி.
மு.க.ஸ்டாலின் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரது பொய்யுரைகளை மக்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் நடந்த கொடுமைகளை மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன் எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்து, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதற்காக கட்சியினர் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.