தனியார் நிறுவன அதிகாரியிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி கோவையை சேர்ந்த புரோக்கருக்கு வலைவீச்சு


தனியார் நிறுவன அதிகாரியிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி கோவையை சேர்ந்த புரோக்கருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 March 2019 10:30 PM GMT (Updated: 24 March 2019 8:52 PM GMT)

புதுவையில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.60 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.75லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்த புரோக்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அஜீஸ்நகரை சேர்ந்தவர் தாமோதரன்(வயது 52). தனியார் பேக்கேஜிங் நிறுவனத்தில் இணை மேலாண் இயக்குனராக உள்ளார். புதுவை எம்.பி. கோகுலகிருஷ்ணனின் உறவினர் ஆவார். இவர் தனது நிறுவனத்தை மேம்படுத்த கடந்த 2016–ம் ஆண்டு ரூ.60 கோடி கடன் கேட்டு வங்கியை அணுகினார்.

ஆனால் அவருக்கு வங்கியில் கடன் கிடைக்க காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது நண்பர் மூலம் கோவையை சேர்ந்த தங்கவேலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தங்கவேலு வங்கிகளில் கடன் பெற்றுக்கொடுக்கும் புரோக்கராக உள்ளார். அவர் வெளிநாட்டில் நேரடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலம் ரூ.60 கோடி கடன் பெற்று தருவதாகவும் அதற்கு நடைமுறை கட்டணமாக ரூ.1 கோடி தர வேண்டும் என்று தாமோதரனிடம் கூறியுள்ளார். ஆனால் தாமோதரன் தன்னிடம் ரூ.1 கோடி இல்லை என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தாமோதரன் கடந்த 2016–ம் ஆண்டு ஜூலை மாதம் கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.1½ கோடி கடன் பெற்றுள்ளார். அந்த நிறுவனம் வட்டியை கழித்து ரூ.1 கோடியே 21லட்சத்தை தாமோதரனின் வங்கி கணக்கில் செலுத்தியது. அவர் அதில் இருந்து ரூ.1 கோடியை தங்கவேலுவின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் ரூ.60 கோடி கடனை பெற்று தருவதாக உறுதி அளித்தார்.

ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் தங்கவேலு கடனை பெற்றுக்கொடுக்கவில்லை. இது தொடர்பாக தாமோதரன் தொடர்பு கொண்டு கேட்ட போது கடன் தொகை பரிசீலனையில் உள்ளது. விரைவில் வந்து விடும் என்று கூறி இழுத்தடித்து வந்தார். இந்த நிலையில் தங்கவேலு தான் வாங்கிய தொகையில் ரூ.24 லட்சத்து 70 ஆயிரத்தை மட்டும் தாமோதரனுக்கு அனுப்பி வைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தாமோதரன் இது குறித்து கேட்ட போது அவர் மீதம் உள்ள ரூ.75லட்சத்து 30 ஆயிரத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். எனவே தாமோதரன் தான் மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்தார்.

இது குறித்து அவர் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி கோவையை சேர்ந்த தங்கவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story