கொடைக்கானல் அருகே, வனப்பகுதியில் பற்றி எரியும் தீ - புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதி
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் பற்றி எரியும் தீயால் உருவாகிய புகை மண்டலத்தால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் வனம் மற்றும் தனியார் தோட்டங்களில் உள்ள புற்கள், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதனால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று கொடைக்கானல்-பழனி சாலையில் பி.எல்.செட் மற்றும் வடகவுஞ்சி பகுதிகளில் வனப்பகுதி மற்றும் தனியார் பட்டா நிலங்களில் தீப்பற்றியது. செடி, கொடி, மரங்கள் பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் இந்த புகைமண்டலம் மலைப்பாதையை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
ஆனால் இந்த தீயை அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீ வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. மேலும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வனப்பகுதி மற்றும் பட்டா நிலங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே கொடைக்கானல் வனப்பகுதி மற்றும் தனியார் நிலங்களில் அடிக்கடி காட்டுத்தீ பரவி வருகிறது. எனவே கொடைக்கானலுக்கு கூடுதல் தீயணைப்பு தடுப்பு குழுவினரை அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Related Tags :
Next Story