திருவள்ளூர் தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்


திருவள்ளூர் தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 4:00 AM IST (Updated: 25 March 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பூந்தமல்லி,

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமாரிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், அ.தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்டச்செயலாளர் சிறுணியம் பி.பலராமன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் வ.பாலா என்கின்ற பாலயோகி ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல அதே தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரும் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. திருவள்ளூர் தெற்கு மாவட்டச்செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், காங்கிரஸ் திருவள்ளூர் மாவட்டத்தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், தி.முக. திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் காரணமாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்பவர்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர்.

Next Story