ஜெ.ஜெ.நகரில் தீ விபத்தில் 11 வாகனங்கள் எரிந்து நாசம்


ஜெ.ஜெ.நகரில் தீ விபத்தில் 11 வாகனங்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 26 March 2019 3:30 AM IST (Updated: 26 March 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஜெ.ஜெ.நகரில், வாகனங்கள் பழுது பார்த்து புதுப்பிக்கும் 3 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

பூந்தமல்லி,

சென்னை முகப்பேர் மேற்கு, ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நெற்குன்றத்தை சேர்ந்த கார்த்திகேயன், பால்ராஜ், விஜய் ஆகியோர் தனித்தனியாக செட் அமைத்து கார், லோடு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பழுது பார்த்து, புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார்கள்.

இங்கு பழுது பார்த்து புதுப்பிக்க 10 கார்கள் மற்றும் லோடு ஆட்டோக்கள் வந்திருந்தன. அவை அனைத்தும் கடைகளுக்கு உள்ளேயும், அருகேயும் நிறுத்தி வைத்து இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து கடையை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

நள்ளிரவில் திடீரென இந்த கடைகளில் இருந்து புகை வந்தது. இதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஜெ.ஜெ.நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 3 கடைகளிலும் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 3 கடைகளிலும் எரிந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் தீ விபத்தில் 3 கடைகளுக்கு உள்ளேயும், அருகேயும் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 கார்கள், 1 மோட்டார்சைக்கிள் என மொத்தம் 11 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை செய்தனர். முதல்கட்ட விசாரணையில், இந்த கடைகளுக்கு பின்பகுதியில் உள்ள கூவத்தையொட்டி கிடந்த குப்பைகளில் எரிந்த தீ மளமளவென இந்த கடைகளுக்கும் பரவி இருப்பது தெரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் தீ விபத்துக்கு வேறு காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story