தஞ்சையில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4½ லட்சம் பறிமுதல்


தஞ்சையில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 26 March 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4½ லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கரூப்ஸ் நகரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி, போலீஸ் ஏட்டு கணேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பணம் எடுத்துச்செல்லும் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் இருந்தவர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்துச்செல்வதாக கூறினர். அவர்களிடம் சோதனை செய்த போது ரூ.4 லட்சத்து 57 ஆயிரத்து 22 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். இதையடுத்து தாசில்தார் அருணகிரி, உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை எடுத்துச்செல்லுங்கள் என்று கூறியதோடு, அதுவரை பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Next Story