ராஜபாளையம் அருகே பயங்கரம்: ஓட, ஓட விரட்டி வாலிபர் கொலை பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடையவர்
ராஜபாளையம் அருகே வாலிபர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.
தளவாய்புரம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பாட்ஷா என்கிற மாடசாமி (வயது 35). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று காலை இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் முகவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். தேவியாறு ஓடைப்பகுதியில் உள்ள குடிநீரேற்று நிலையம் அருகே வந்த போது, அங்கு பதுங்கி இருந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மாடசாமியை வழிமறித்தது.
அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு மாடசாமி ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்றது.
ஓட, ஓட விரட்டி அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. கழுத்து, தோள்பட்டை என பல இடங்களில் சரமாரியாக வெட்டுப்பட்ட மாடசாமி ரத்த வெள்ளத்தில் விழுந்து அங்கேயே உயிரிழந்தார்.
அவரை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மாடசாமியின் உடல் பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். பசுபதி பாண்டியன் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் மாடசாமி தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.
எனவே முன்விரோதத்தில் இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு, கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.